ஞாயிறு, 8 நவம்பர், 2015

இலக்கியங்களில் சமுதாயச் சித்திரிப்பு


சமுதாயச் சித்திரிப்பு

       இலக்கியமென்பது மொழியாலான ஒரு சமூகம் எனச் சொல்லப்படுவதன் பொருள் என்ன? இலக்கியம் சமூகத்தில் இருந்துதான் பிறக்கிறது என்றாலும் சமூகமும்  இலக்கியம் காட்டும் சமூகமும் ஒன்றல்ல என்பதுதான் அதன் பொருள்.  அதாவது இடையில் ‘மொழி’  என்கிற ஊடகம் இருக்கிறது. எனவே இலக்கியம் சமுதாயத்தைச் சித்திரிப்பதற்குப் பல அழகியல் உத்திகளைப் பயன்படுத்துகிறது என்ற உண்மையை மறந்துவிடக் கூடாது.  இலக்கியம் மனித சமூகத்தை அழகியல் முறையில் புரிந்துகொள்ளப் பயன்படும் ஒரு வடிவம். சமுதாயத்தைச் சித்திரிப்பதற்கு முயலும் படைப்பாளிக்கென்று தன் காலம் தனக்குள் கட்டமைத்த தனிப்பட்ட விருப்பு வெறுப்பு  கொள்கை எதிர்காலக் கனவு முதலியவற்றின் அடிப்படையில் ‘தேர்ந்தெடுக்கிற’  ஒரு முறையியல் செயல்படுகிறது.  ‘இந்த மனித வாழ்க்கை பயங்கரமானது அது வேறு ஒரு வகையில் இருக்கவே முடியாது’  என்று ஒருவர் இந்தச் சமுதாயத்தைச் சித்திரித்துக் காட்டுகிறார் என்றால்  அவர் ஒரு புள்ளியில் ஒரு கோணத்தில் நின்றுகொண்டு இச்சமூகத்தின் ஒரு கூறினை வெளிப்படுத்துகிறார் என்றுதானே நாம் பொருள் கொள்ள முடியும். எனவே சமுதாயச் சித்திரிப்பு என்பது படைப்பாளியின் அணுகுமுறைக்கு ஏற்ப மாறக்கூடியது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.  எழுத்தாளர்களின் பின்புலம்  நோக்கம்  சமுதாயத் தேவை எதிர்கோள் ஆகியவற்றிற்கு ஏற்பச் சமுதாயச் சித்திரிப்பு அமையுமென வரையறுக்கிறார் தி.சு. நடராசன். நான்கு விதங்களில் அச்சித்திரிப்பு அமையலாம் எனவும் அவர் கூறுகிறார்.  1. சமுதாயச் சிக்கல்களை எதிர்கொண்டு நேராகக் காட்ட விரும்பாமல் மிகையான கற்பனையுடன் புனைந்துரைத்தல் அல்லது பழைய சமூக வாழ்க்கையை உயர்த்திக்காட்டி அதைத் திரும்பக் கொண்டுவர விரும்புதல் 2. வாழ்க்கை அனுபவங்களை நுணுக்கமான விவரங்களுடன் இயல்பு நவிற்சியாகச் சித்திரித்தல் 3. அவற்றை அப்படியே சொல்வதோடு அவற்றை விமர்சித்தும் கூறுதல் 4. சமுதாய நிலைகளையும் போக்குகளையும் காரண-காரிய முறையில் இனம் கண்டு கூறுதல் (தி.சு. நடராசன் பக். 58-59).

    பாரதியார் தம்காலத் தேவைக்கு ஏற்பவும் தாம் சார்ந்த தேசிய இயக்கக் கொள்கைகளுக்கு ஏற்பவும் பழைய இந்தியச் சமூகத்தின் சிறப்புகளையும் சித்திரித்தார். நடப்புவாழ்வின் அடிமைத்தனம் மிடிமை அறிவின்மை ஆகியவற்றையும் ‘நெஞ்சு பொறுக்குதிலையே’  என்று சித்திரித்தார்.
   
        எதிர்கால இந்தியா எப்படியிருக்கவேண்டும் என்ற தம் கனவுகளையும் காட்டினார். அரசியல் அறங்கள் சமயம் பண்பாட்டு நிகழ்வுகள்   பொருளாதார நடவடிக்கைகள்   குடும்பம்   தனிமனித உணர்வுகள் எனப் பல்வேறு பிரிவுகளையும் உள்ளடக்கியது சமூகம்  அதனைச் சித்திரிப்பதில் மேற்கண்ட சில  பல  அல்லது ஒன்று மட்டும் கூடப் படைப்பில் இடம்பெறலாம். எடுத்துக்காட்டாக  லா.ச.ரா.வின் படைப்புகள் அனைத்துமே குடும்பம் என்ற நிறுவனத்தையே மாபெரும் தளமாகக் கொண்டு அதன் சிக்கல்கள்  சிறுமை - பெருமைகள்  நுட்ப உளவியல் சிக்கல்கள்  தத்துவ விசாரங்கள் என விரிகின்றன.  பெரும்பாலான உரைநடைப் படைப்பாளிகள் குடும்ப நிகழ்வுகளையே மிகுதியும் சித்திரித்தனர்.  அவர்களுள் தி. ஜானகிராமன் குடும்பங்களுக்குள் பாலியல் உணர்வு -   உறவுகளை அதிகம் சித்திரித்தார். சிலப்பதிகாரத்தில் குடும்பம் என்பதோடு அரசியல்  அறங்கள்  சமயம் பண்பாட்டு நிகழ்வுகள் போன்ற பலவும் சித்திரிக்கப்பட்டுள்ளன.


              மனித வாழ்விடச் சு10ழல்கள் படைப்புச் சித்திரிப்புகளில் சிறப்பிடம் பெறுவன.  சங்க காலத்தில் குறிஞ்சி பாலை முல்லை மருதம் நெய்தல் ஆகிய ‘இடம்’ சார்ந்த சித்திரிப்புக்கள் கதை மாந்தர்கள் போலச் சங்க இலக்கியப் பாடல்களில் மிகச் சிறப்பாக ஒவ்வொரு பாடலிலும் இடம் பெற்றிருப்பதை நீங்கள் அறிவீர்கள்.  ஆற்றுப்படை இலக்கியங்களில் இந்தச் சித்திரிப்பு விரிவாகவே அமைந்துள்ளது. இது போலவே பெரும்பொழுது  சிறுபொழுதெனக் ‘காலம்’  சார்ந்த சித்திரிப்புகளும் இலக்கியத்தில் தொடர்ந்து கையாளப்பட்டு வந்துள்ளன. தொல்காப்பியர் அக இலக்கியத்துக்கு இலக்கணம் கூறும்போது நிலம் பொழுது ஆகியவற்றை அவ்விலக்கியத்துக்குரிய ‘முதற்பொருள்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

முதலெனப்படுவது நிலம்பொழு திரண்டின்
இயல்பென மொழிப இயல்புணர்ந்தோரே.       (தொல். அகத். 4)

பின் வந்த தண்டியலங்காரம் பெருங்காப்பிய நிலை பேசும்போதுகூட மலை கடல் நாடு நகர் இருசுடர்த் தோற்றம்  மறைவு பற்றிய வருணனைகள் இடம்பெற வேண்டும் என விதித்துள்ளதும் எண்ணத் தக்கது. இடைக்காலத்தில் பக்தி இலக்கியங்களிலும் காவியங்களிலும் கால இட வர்ணனை இன்றியமையாத இடம் பெற்றிருப்பதைப் பார்க்க முடிகிறது.  நவீன இலக்கியங்களில் நகர்ப்புறச் சித்திரிப்புகளும்  ‘வட்டார இலக்கியம்’ என்ற பேரில் கிராமப்புறச் சித்திரிப்புகளும் இடம் பெறுவதைக் காண முடிகிறது.  

          அசோகமித்திரன் இந்திரா பார்த்தசாரதி ஆகியோர் புனைகதைகளில் நகரம் சார்ந்த சித்திரிப்புகளும்  கி. ராஜநாராயணன் பூமணி நீல. பத்மநாபன் சண்முகசுந்தரம் முதலியோர் கதைகளில் கிராமப்புறச் சித்திரிப்புகளும் மிக மேலான படைப்பாக்கத்தளத்தில் இடம் பெற்றுள்ளன.

   கதை சொல்லல் எனும் படைப்பு நடவடிக்கை   இடத்தையும் காலத்தையும் சுட்டாமல் சாத்தியமில்லை. எனவேதான் இலக்கியச் சித்திரிப்பில் இவைகள் தொடர்ந்து இடம் பெற்று வருகின்றன.

       சமூகத்தில் பலவேறு பிரிவினர் வாழ்கின்றனர். தொழில் சாதி வர்க்கம் மொழி பால் முதலியவற்றின் அடிப்படையில் மனிதர்கள் அடையாளங் காணப்படுவது இயல்பாக இருக்கிறது.  இந்தப் பிரிவினரின் வாழ்வில் காணப்படும் பருமையான நுட்பமான வேறுபாடுகளுடன் வாழ்ந்து விவரங்களைத் திரட்டி அவற்றின் அடிப்படையில் இலக்கிய ஆக்கம் உருவாவதும் வழக்கமாகி இருக்கிறது. செல்வராஜ் ‘தேனீர்’ என்ற நாவல் மூலம் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வையும் பாமா ‘கருக்கு’ என்ற நாவல் மூலம் தலித் மக்களின் வாழ்வினையும் சு. சமுத்திரம் ‘வாடாமல்லி’ என்ற நாவல் மூலமாக அலிகளின் வாழ்க்கையினையும்  ச. பாலமுருகன்  ‘சோளகர் தொட்டி’  மூலம் பழங்குடி மக்களின் வாழ்வுத் துயரங்களையும் சித்திரித்துள்ளனர்.

    இலக்கியத்தில் இடம்பெறும் கடவுள்  புராணம்  சமயம் சார்ந்த சித்திரிப்புகளுக்கும் சமூகத்திற்கும் என்ன தொடர்பு? நாம் முன்பே பார்த்தது போலக் குடும்பம் கல்வி அரசு முதலியவை போலச் ‘சமயமும்’ எந்தவொரு சமூகத்திலும் நிறுவனத்திற்குரிய பண்போடு இயங்கிக் கொண்டிருக்கிறது. எனவே சமயமும் சமூகம் சார்ந்ததுதான்.  சமயம் சார்ந்த கடவுள் தத்துவம் வழிபாடு விழாக்கள் போன்றவை மக்களின் அன்றாட வாழ்வில் இடம் பெறுகின்றன.  எனவே அவற்றைச் சித்திரிப்பதும் சமூகச் சித்திரிப்பின்பால் அடங்கும்.

      இத்தகைய பல்வேறு சமூகச் சித்திரிப்புகளை அடிப்படையாகக் கொண்டு இலக்கியத்தின் சமூகப் படப்பிடிப்பைத் திறனாய்வாளன் எடுத்துக்காட்டுவது சமுதாயவியல் அணுகுமுறையின் பயன் ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக