ஞாயிறு, 8 நவம்பர், 2015

பேரறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள் பகுதி-6

பொன்மொழிகள்

1. ஆத்ம சக்தியிலே ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட காந்தியாருக்குக்கூட நோய் கண்டபோது, ஆத்மசக்தி அல்ல் ஆறு டாக்டர்கள்தான் அவசியமாகத் தேவைப்பட்டனர் ஏன்? அதைத்தான் கொஞ்சம் உங்களைச் சிந்திக்கச் சொல்லுகிறேன்.

2. ஒருவரை ஒருவர் கண்டதும் முகமலர்ச்சி சிரமமின்றி ஏற்படவேண்டும். பயன் கருதி அல்ல - பாசாங்குக்கு அல்ல - அர்த்தமற்று அல்ல - கண்டதும் களிப்பு - நம்மைப்போல ஒருவன் என்ற நினைப்பிலிருந்து களிப்பு மலர வேண்டும். அந்த அகமலர்ச்சிக்குப் பெயர்தான் தோழமை.

3. ரேடியோவும் டெலிபோனும் ஒலிபெருக்கியும் மின்சாரமும் ஞானப்பால் உண்டதால் வந்த வல்லமைகள் அல்ல. அசரீரி அடி எடுத்துக்கொடுத்ததால் உண்டான அற்புதங்களுமல்ல. தன்னலமற்ற அறிவாளிகளின் உழைப்பால் விளைந்த உன்னதப் பொருள்கள் அவை.

4. வைரம் ஜொலிக்க வேண்டுமானால், சானை பிடிக்கத்தான் வேண்டும். தங்கம் பிரகாசிக்க வேண்டுமானால் தணலில் காய்ச்சத்தான் வேண்டும். ஆம் அதைப்போல், நல்வாழ்வு பெற வேண்டுமானால் நாம் பகுத்தறிவுப் பாதையில் செல்லத்தான் வேண்டும்.

5. நமது இலட்சியம் அரசியல் வேட்டையல்ல, மந்திரி நாற்காலியல்ல. நாலாறு பெறுவதல்ல. நமது மூதாதையர் ஆண்ட நாட்டை மீண்டும் பெறுவது - புதிய அரசை அமைப்பது, அதுதான் நம்முடைய நோக்கம்.

6. பல திறப்பட்ட கருத்துக்கள் உலவி ஒன்றோடொன்று போரிடும் தன்மை படைத்ததோர் போர்க்களம்தான் பேச்சு மேடை. அந்தக் களத்திலே பரிசும் உண்டு, பகையும் உண்டு.

7. விடுதலை பெறுவதற்கு இன்றியமையாதது, அதற்கான உணர்ச்சிக்கு ஊறு நேரிடாதபடி பார்த்துக் கொள்வதும், உணர்ச்சி பெற்றவர்களின் நிலையை உண்டாக்குவதுமாகும்.

8. கெட்ட பொருள், குப்பை கூளம், காற்றுப் பொருள் - இவற்றிடம் தீண்டாமை அனுஷ்டிக்கத்தான் வேண்டும். ஆனால், பல கோடி மக்களை, தாய்நாட்டவரை, மூதாதையர் காலம் முதல் நம்முடன் வாழ்ந்து வருபவரைத் தீண்டமாட்டோம் என்று கூறுவது அறிவுடமை ஆகுமா? 

9. ஜாதி - இது ஒழிய வேண்டுமா? வேண்டாமா? என்பதுதான் இன்றுள்ள கேள்வி. பாழாய்ப்போன ஜாதிப்பேச்சு ஆரம்பமாகிவிட்டதா? எந்த ஜாதியாக இருந்தால் உனக்கென்னய்யா? இது அந்தக் கேள்விக்குரிய பதில் அல்ல. ஜாதியை நிலை நாட்டுவதற்குரிய தந்திரம். 

10. அவசியமானது - ஆகவே செய்யப்பட வேண்டியது என்பதல்ல முதலாளித்துவம். லாபகரமானது - ஆகவே, செய்யப்பட வேண்டியது என்பதுதான் முதலாளித்துவம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக