ஞாயிறு, 8 நவம்பர், 2015

பேரறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள் பகுதி-5

பொன்மொழிகள்

1. ஏழைகளை வஞ்சிக்க ஓர் ஏற்பாடு. அதற்குப் பெயர் மதம். உழைக்கிறவனை ஒடுக்குவதற்கு ஓர் இயந்திரம் - அதற்குப் பெயர் ஜாதி. பகற் கொள்ளை அடிப்பதற்கு ஒரு திட்டம் - அதற்குப் பெயர் பூசை, சடங்கு, தட்சணை.

2. விஞ்ஞானக் கண்டுபிடிப்பான மோட்டாரில் ஏறிக்கொண்டு வைதிகத் திருப்பதி மலைக்கு மொட்டையடிக்கச் செல்வது, முதல்தரமான முட்டாள்தனமல்ல. விஞ்ஞான அறிவுக்கு நாம் செய்யும் மகத்தான துரோகமும் ஆகும்.

3. அவதார புருஷனாகிய இராமனால் கண்டுபிடிக்கமுடியாத ரயிலை ஒரு சாதாரண மனிதனாகிய ஜேம்ஸ்வாட் தான் கண்டு பிடிக்க முடிகிறது. என்ன பொருள் இதற்கு? அவதார புருஷனாக இருப்பதைவிட சாதாரண மனிதனாக இருப்பது மேல் என்பது தானே?

4. அவர் சங்கரர்; இவர் ஜீயர்; இது தம்பிரான்; அது சாமியார் என்று யார் யாரையோ பூஜித்து அலுத்தீர்- பழைய வழியிலே நடந்ததால். இனி உழைப்பாளி விஞ்ஞானி. பொதுநல ஊழியன் என்பவரை ஆதரிக்கும் புதிய வழியில் நடவுங்கள்; உலகு சீர்திருந்தும்.

5. இந்தியாவில் அறிவு சூன்யமே. ஞானம் இருப்பதை இல்லை என்று கூறுவதே வேதாந்தம். இல்லாததை உண்டு என்று நம்பச் செய்வதே மார்க்கம். பொய்யும் புரட்டுமே சாஸ்திரம்.

6. தீண்டாமையைக் கையாள்வது நியாயமல்ல என்றுதான் தெரிகிறது. ஆனால் ..... என்று பலர் இழுத்தாற்போல் பேசுகின்றனர்.ஆனால் என்று அநேக காலமாகக் கூறியாகிவிட்டது. இனி நாம் ஆனால் என்பதை மறந்து ஆகையால் தீண்டாமை கூடாது என்று கூறியாக வேண்டும்.

7. அபின் விற்று வாழ்பவன். போதை கூடாது என்று சொற்பொழிவு ஆற்றுவானா? புராணப் பொய்யையே நம்பி வாழும் ஆரியர். மூடநம்பிக்கைக் கூடாது என்று போர்ப்பரணி பாடுவாரா? பாடத்தான் மாட்டார்கள்! எப்படிப் பாடுவார்கள்?

8. காரைக்காலம்மையை, கண்ணப்பரை, குகனை அவனுடைய ஓடத்தில் ஏறிச் சென்ற இராமனை, அனுமனை-அவன் வாலின் பெருமையை ஆகிய இவைகளையே நாம் இன்னமும் பேசிக் கொண்டிருந்தால், எப்படித் தோன்றுவார் ஒரு கலிலியோ இங்கு?

9. புஞ்சையிலே நஞ்சைப் பயிர் பலிக்காது. குளிர்ப்பிரதேச விளைவு, கொதிப்புள்ள இடத்திலே பயிராகாது. அவை போலத்தான் புராண ஏடுகளை மட்டும் படித்துப் பயிலுவோரிடம் அறிவுத் தெளிவு ஏற்படமுடியாது.

10. குடி கெடுப்பவன் - கும்பாபிஷேகம் செய்கிறான். கொள்ளை லாபமடித்தவன் வெள்ளி ரிஷபம் செய்து வைக்கிறான். விபசாரி அபிஷேகம் நடத்துவிக்கிறாள். இவ்வளவையும் தடையின்றி ஏற்றுக் கொள்கிறார் ஆண்டவன். ஏற்றுக் கொள்ளலாமா?

11. வியாசர் கூப்பிட்டபோது உலகம் வரவில்லை. நாம் கூப்பிட்டால் ரேடியோ மூலம் உலகமே நம் முன் வந்து நிற்கிறது. எதனால் ஏற்பட்டது இந்தத் திறமை நமக்கு? பக்தியாலா? இல்லை! பகுத்தறிவால்.

12. வாழ்வாவது மாயமாம்! இது மண்ணாவது திண்ணமாம் இப்படியானால் மண்ணாகக்கூடிய இந்த வாழ்விலே வெள்ளி வாகனங்களேன்! வைரக் கிரீடங்களேன்! மாணிக்க மூக்குத்திகளேன்? பரமன் ஆலயங்களிலே இவையெல்லாம் அமைக்கப்பட்டிருப்பதேன்? திராவிடர் என்ற சொல் கற்பனையுமல்ல. கனவுலகக் கண்டுபிடிப்புமல்ல. காவியத்தில் உள்ள சொல். வரலாற்றில் வருகிற பெயர். ஒரு சிறந்த இனத்தவரின் அரிய திருநாமம். அந்தப் பெயரைத்தான் கூறுகிறோம் நாம். இந்தியன் என்பது போன்ற அரசியல் சூதாட்டப் பெயரையல்ல.

13. சமத்துவம், சமதர்மம் போன்ற இலட்சியங்களைப் பேசுவது சுலபம். சாதிப்பது கடினம். அந்த இலட்சியத்தின் சாயலை - முழுப்பயனைக்கூட அல்ல - சாயலைப் பெறுவதற்கே பல நாடுகளில் பயங்கரப் புரட்சிகள் நடந்திருக்கின்றன. நினைவிருக்கட்டும்.

14. மனித சமுதாயத்தின் அல்லலை, விஞ்ஞானம் எந்த அளவு குறைத்திருக்கிறது என்பது பற்றி எண்ணினால் மக்கள் வீழ்ந்து வணங்கவும் செய்வார்கள் விஞ்ஞானத்தின் முன்பு. மனித சமுதாயத்தின் வேதனையை விஞ்ஞானம் அந்த அளவுக்குக் குறைத்திருக்கிறது.

15. ஆழ்வாராதிகள், நாயன்மார்கள் கதைகளைப் புராணிகர்கள் படிக்கட்டும். வீர வாலிபர்களே! நீங்கள் உலக அறிவாளிகள், உத்தம விஞ்ஞானிகள் ஆகியோரின் வாழ்க்கை வரலாறுகளைப் படியுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக