ஞாயிறு, 8 நவம்பர், 2015

பேரறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள் பகுதி -1


அண்ணாவின் சிந்தனைகளுள் சில,  

'அண்ணா அவர்கள் நமது நாட்டுக்கு ஒரு நிதி என்று தான் சொல்ல வேண்டும். பகுத்தறிவாளர், மூடநம்பிக்கையற்றவர், மூடநம்பிக்கையை ஒழிக்க என்னோடு இருந்து தொண்டாற்றியவர் ஆவார். இவர் ஆட்சிப் பொறுப்பேற்றதும் பகுத்தறிவுக் கொள்கைப்படி துணிந்து ஆட்சி செய்கிறார். இமயமலை அளவு எதிர்ப்பு இருந்தாலும் அதைப்பற்றிக் கவலைப்படாது, துணிந்து செயலாற்றி வருகிறார் வாழ்க அண்ணா'
                                                                                                                            - தந்தை பெரியார்

1.    ஜாதிகள் இருந்தாக வேண்டும் என்று எண்ணுபவர்கள் எவ்வழி உலகம் செல்கிறது என்பதை அறியாத ஏமாளிகள். காலத்தின் தாக்குதலைக் கயவரின் தாக்குதல் என்றும் பகுத்தறிவின் வேகத்தைப் பாப காரியம் என்றும் தவறாகக் கருதிடும் பக்குவமற்றவர்கள்.

2.    என்ன இருந்தாலும் சார், கலையைக் கெடுக்கக்கூடாது பாருங்கோ என்று குழைவுடன் கூறும் குணாளர்களைக் கேட்கிறேன். கலை, மக்கள் நிலையை மாசுபடுத்தும்போது அந்தக் கலையைத் தொலைக்காமல் வேறென்ன செய்வது?

3.    முருகன் என்றால் அழகுதான்; வேறல்ல என்கிறார்கள் சில முருகதாசர்கள். அப்படியானால் அன்றலர்ந்த ரோஜா, அடவி, ஆறு, மலை, மேகம், வெண்ணிலா, வானவில் ஆகிய அழகுப் பொருள்கள் இருக்க முருகன் என்றோர் தனிக் கற்பனை எதற்கு?

4.    மின்சார விளக்குகள் தேவையில்லை - பழைய குத்துவிளக்குத்தான் இருக்கவேண்டும். விமானம் பறக்கக்கூடாது - கருடன்தான் பறக்கவேண்டும். ரயில் வண்டி கூடாது - கட்டை வண்டிதான் சிறந்தது. தீப்பெட்டி தேவையில்லை - சிக்கி முக்கிக் கல்தான் தேவை. துப்பாக்கியா வேண்டாம் - வேலும் வில்லும் போதும். மாளிகைகள் தேவையில்லை - பர்ணகசாலைதான் வேண்டும் என்று யாரும் பேசுவதில்லை. ஆனால், இந்தக் காலம் கெட்டுவிட்டது. பழைய காலம்தான் நல்ல காலம் என்று பேசவோ தயங்குவதில்லை. இப்படிப் பேசலாமா? பேசுவது நாணயமா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக