1. சித்திரை, வைகாசியில் கருடசேவை, ஆனியில் திருமஞ்சனம், ஆடியில் பூரம், ஆவணியில் அவிட்டம், புரட்டாசிக்குத் திருப்பதி என்று ஒவ்வொரு மாதத்தையும் நாம் புண்ணிய காரியத்துக்கே செலவிட்டால் வேறு உருப்படியான காரியத்தை எப்போது தான் புரிவது?
2. ஆயிரம் கண்ணுடையாள் என்று அர்ச்சிக்கிறார்களே காளியை, அதில் ஒருகண்ணால் பார்க்கக்கூடாதா ஏழைகளை! ஏழைகள் படும் அவதியை! அவளை பக்தியோடு பூஜித்தால் பலன் உண்டு என்று சொல்கிறார்களே பூஜித்துப் பூஜித்து ஏழைகள் கண்ட பலனென்ன?
3. சினிமாப் படத்தில் யாரோ ஒரு மாது ஆபாசமாகக் காட்சியளித்தால் ஆக்ரோஷத்துடன் அதைக் கண்டிக்கிறோம். ஆனால் கம்பன் கலையிலே நெளிந்து கிடக்கும் காமரசத்தைக் கண்டிக்கமட்டும் தயங்குகிறோம். ஏன்?
4. முதலாளி - நிலப்பிரபு - புரோகிதன் இந்த மூவகைச் சுரண்டல் சக்திகளிலே ஒன்றைவிட்டு மற்றதை மட்டும் முறிப்போம் என்றால் முடியாது. ஏனெனில் சுயநலம், சுயசுகம் என்ற பசைபோட்டு இந்த மூன்று வளைவுகளையும் ஒன்றுடன் ஒன்று சேர்க்கப்பட்டிருக்கிறது.
5. ஆலமரத்துப் பிள்ளையாருக்குக் கர்ப்பூரம் வாங்கிக் கொளுத்துவதைவிட ஆரஞ்சுப் பழத்தையே கண்டிராத உன் அருமைக் குழந்தைக்கு ஓர் ஆரஞ்சு வாங்கிக் கொடுப்பது மேல் என்று கூறுகிறது திராவிட இயக்கம். கூறக்கூடாதா? கூறுவது குற்றமா?
6. எங்கோ ஒரு குக்கிராமத்தில் குறி கூறுவான் ஒரு தந்திரக்காரன். அங்கே கும்பல் கூடும். அதற்கு அருகே அரியதோர் இயற்கை காட்சி இருக்கும். ஆனால் அதைக் காணவோ யாரும் வரார். இப்படிப்பட்ட நாட்டிலே இலக்கியம் வளரவில்லை என்றால் எப்படி வளரும்?
7. பாசியை நீக்கிவிட்டுக் குளத்தின் படிக்கட்டுகளை இடித்த கதைபோல, கனியைக் கொடுத்துவிட்டு, கடுவனையும் நிறுத்தியதுபோல. காலிலே தண்டையைப் பூட்டிவிட்டுக் கழுத்துப் புண்ணுக்கு மருந்திட மறுப்பது போல, பிரிட்டிஷ் ஆட்சி நம் நாட்டில் உடன்கட்டை ஏறுவதைத் தடுத்தது. ஆனால் தீண்டாமையைத் தடுக்கவில்லை. துடுக்கர் கூட்டத்தை ஒடுக்கிற்று. ஆனால் மதத்தரசர் கூட்டத்தைக் கொழுக்கவைத்தது. நகர், ஊர் பலவற்றை எழுப்பிற்று. ஆனால் சேரிகளைத் தகர்க்காது விட்டது. ஆம் ஏகாதிபத்தியத்தின் போக்கு மிகவும் விசித்திரமானது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக