பொன்மொழிகள்
1. கட்டுப்பாடும், ஒழுங்கும் கட்டாயம் நமக்குத் தேவை. இவை சாதாரணமானவைதான். ஆனால் இம்மாதிரி சாதாரண விஷயங்களைக் கொண்டுதான் ஒரு சமூகத்தை எடை போட முடியும்.
2. மொழியால்தான் நால்வர், ஆனால் கலாசாரத்தால், பண்பால், பழக்க வழக்கங்களால், உடையால், உள்ளத்தால் ஒருவரே திராவிட இனத்தவர்.
3. வெட்டிப்பேச்சைத் தட்டி நடக்கும் தீரம், வீணரின் கொட்டத்தை அடக்கியாக வேண்டுமென்ற வீரம், அநீதியைக் கண்டால் கொதித்தெழுந்து தாக்கும் பண்பு - இவை, வயோதிகரை விட வாலிபர்களிடையேதான் மிகுந்திருக்கும்.
4. முடியுமா? காலம் சரியா? போதுமான பலமிருக்கிறதா? இந்தப் பேச்சு வாலிபர்கட்கு. இனிப்பாய் இரா. சும்மா இருக்கலாமா - சொரணையற்றவர்களா நாம் - புறப்படு - போரிடு - இந்தப் பேச்சுதான் வாலிபர் செவி புகும்.
5. சாதி முறையை நாம் எதிர்க்கிறோம் என்றால் பொருளாதார பேத நிலையை உண்டாக்கியதும் நிலைத்திருக்கச் செய்வதுமான கொடிய ஏற்பாட்டைத் தகர்க்கிறோம் என்று பொருள். அதாவது சமதர்மத்திற்கான சூழ்நிலையை ஏற்படுத்துகிறோம் என்று அர்த்தம்.
6. பொதுவுடமை வாழ்வு என்றால் என்ன என்று கேட்கிறீர்களா - அது ஒரு புத்தம் புதிய நிலை. புண்ய பாவத்தை விரட்டிய நிலை. தத்தளிப்பைத் தவிர்த்த நிலை. தாசர், நீசர் என்னும் பேச்சை ஒழித்த நிலை. ஏழ்மை வறுமை இல்லாத நல்ல நிலை.
7. பணக்கார உலகம் இருக்கிறதே அது மிகவும் விசிரமானது. பணம் மட்டும் இருந்துவிட்டால் அங்கே, முட்டாள்களும் புத்திசாலியாகப் போற்றப்படுவர். கோழையும் வீரர் பட்டம் பெறுவான். ஆனால் இது முறையா? சரியா? நாமும் இதை ஏற்கத்தான் வேண்டுமா?
8. இலட்சியம் வெற்றி பெற வேண்டுமானால் அந்த இலட்சியத்தின் நியாயத்தை விளக்கிவிட்டால் போதாது. அந்த இலட்சியத்திற்குப் பலத்தையும் சேர்த்தாக வேண்டும். ஏனெனில் எவ்வளவு நியாயமான இலட்சியமும் பலத்துடன் கூடி இருந்தாலொழிய வெற்றி பெற முடியாது.
9. தொழிலாளி வெறும் உழைப்பாளியாக மட்டும் இருக்கும் நிலை மாறி, அவன், தொழிற்சாலைகளிலே பங்காளியாகவும் ஆக்கப்பட்டால்தான் விஞ்ஞானத்தைத் தன் கூட்டாளி என்று உறவு கொண்டாட முடியும்.
10. பகுத்தறிவுக் கொள்கைகளை மறுப்போர் தொகை குறைந்துவிட்டது. நேர் மாறாக அவற்றைத் தூற்றுவோர் பிதற்றல் வளர்ந்துவிட்டது. இது குறையக் குறைய அது வளரும். அது இயற்கை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக