ஞாயிறு, 8 நவம்பர், 2015

பேரறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள் பகுதி - 2

 பொன்மொழிகள்


1.    பொதுவுடைமை வாழ்வு என்றால் என்ன என்று கேட்கிறீர்களா - அது ஒரு புத்தம் புதிய நிலை. புண்ணிய பாவத்தை விரட்டிய நிலை. தத்தளிப்பைத் தவிர்த்த நிலை. தாசர், நீசர் என்னும் பேச்சை ஒழித்த நிலை. ஏழ்மை வறுமை இல்லாத நல்லநிலை.

2. அறிவுப் பண்ணைக்குப் பணியாற்ற முன் வருபவர்களை நாடு வரவேற்பதில்லை. நையாண்டி செய்கிறது. மதிப்பளிப்பதில்லை. தொல்லை தருகிறது. எனினும் அந்த ஒரு சிலரால்தான் நாடு முன்னேறுகிறது.

3. குழந்தைப் பருவத்தில் மனித சமுதாயம் இருந்தபோதுதான் இடிதேவன், மின்னல் மாதா, மழை மாகாளி, தீக்கடவுள் என்று கடவுட் கதைகள் தேவைப்பட்டன. அறிவுப் பருவத்தை அவனியோர் பெற்றுள்ள இந்தக் காலத்தில் இவை எதற்கு?

4. உயர்வகுப்பென்று உறுமிக்கொண்டு பிறரை அடக்கியாள்வதும் ஆண் என்று ஆர்ப்பரித்துப் பெண்களை இழிவு செய்வதும்தான் புனித இந்து மார்க்கத்தின் பெரிய பெரிய நீதிகள். நாடு வாழவேண்டுமானால் இத்தகு நீதிகளைத் தரும் மார்க்கம் மறைய வேண்டும்.

5. புரட்சி என்பது வாலிபத்தின் கூறு; பகுத்தறிவாளர் ஆயுதம். பழைமை விரும்பிகள் - புரட்டர்கள் - எதேச்சதிகாரிகள் ஆகியோருக்கு நஞ்சு. மக்களின் மகத்தான சக்தி. அதைப் பொசுக்கிவிட எவராலும் முடியாது.

6. சர்வேஸ்வரனின் பொருள் களவு போனால் கூட சாதாரண போலீஸ்தான் கண்டுபிடிக்கிறதேயொழிய கடவுள் சக்தி அதற்கும் பயன்படுவதில்லையே - ஏன்? இந்தச் சில்லறைச் சேட்டைகளைக் கூடத் தடுக்க முடியாத தெய்வங்கள் இருப்பதால் நாட்டுக்கு என்ன பயன்?

7. காதல் உற்றவனின் உறுப்புக்களைச் சிதைப்பது, தவமியற்றிய தமிழன் தலையை வெட்டுவது, தம்பியின் துரோகத்தைத் துணைகொண்டு அண்ணன் தலையைக் கீழே உருட்டுவது - இதன் பெயர்தான் இராமாயணம். இந்த இராமாயணம் நமக்குத் தேவையா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக