ஞாயிறு, 8 நவம்பர், 2015

பேரறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள் பகுதி - 3

பொன்மொழிகள்

1. நாலுவேதம், ஆறுசாஸ்திரம், அறுபத்து நான்கு கலைஞானம் இருக்க, பராசர் யாக்ஞவல்கியர் உபதேசங்கள் இருக்க, உன்னதமான உபநிஷத்தும் உத்தமமான கீதையுமிருக்க, ஒரு வாசகத்துக்கும் உருகாதாரையும் உருகவைக்கும் திருவாசகம் இருக்க, முருகன் அருளைத் தரும் திருப்புகழ் இருக்க, எல்லாம் இருந்தும் இந்த நாட்டிலே இல்லாமையும் போதாமையும் கூடவே இருக்கின்றனவே - அது ஏன்? இல்லாமையைப் போக்க இந்த ஏடுகளால் முடியவில்லை என்றால் ஏன் இருக்க வேண்டும் இவை இன்னமும் இந்த நாட்டிலே?

2. இங்குள்ள ஜாதித் திமிரைக் கண்டிக்க முன் வராத வீரர்கள் தென்னாப்பிரிக்காவில் உள்ள நிறத் திமிரைக் கண்டிப்பது மகத்தான குடியன் மதுவிலக்கு பிரசாரம் புரிவது போன்ற செயல் தவிர வேறென்ன?

3. ஜாதி - இது ஒழிய வேண்டுமா? வேண்டாமா? என்பதுதான் இன்றுள்ள கேள்வி. பாழாய்ப்போன ஜாதிப்பேச்சு ஆரம்பமாகிவிட்டதா? எந்த ஜாதியாக இருந்தால் உனக்கென்னய்யா? இது அந்தக் கேள்விக்குரிய பதில் அல்ல. ஜாதியை நிலை நாட்டுவதற்குரிய தந்திரம்.

4. பூமியிலே புரண்டு கோவிந்தா போடுவதும், வேல் குத்திக் கொண்டு வேலாயுதா என்று சொல்வதும் பக்தி என்று சொல்லப்படுமானால், பக்தி என்ற சொல்லுக்குப் பொருள் பைத்தியம் என்பதாக இருக்கவேண்டும் அல்லவா?

5. நடுப்பகல் - சுடுமணல் - பெருநடை - சுகமான பயணம் - இந்நான்கு தலைப்புகளையும் ஒரே செய்திக்குப் பயன்படுத்தும் தோழரை நீங்கள் என்னவென்று கூறுவீர்கள்? அண்டப் புளுகர் என்பீர்கள்! அத்தகைய புளுகர்களால் எழுதப்பட்ட அர்த்தமற்ற ஏடுகள்தான் புராணங்கள்.

6. விஞ்ஞானி கண்டுபிடித்துக் கொடுத்த மோட்டாரில் ஏறிக்கொண்டு அஞ்ஞானத்தை வளர்க்கும் பஜனை மடத்திற்குச் செல்லும் நம் போக்கைக் கண்டு, உலகக் கொட்டகையில் எவ்வளவு பேர் கேலி செய்கிறார்களோ? யார் கண்டார்கள்? செய்யாமலா இருப்பார்கள்!

7. ஜாதி முறையை நாம் எதிர்க்கிறோம் என்றால் பொருளாதார பேத நிலையை உண்டாக்கியதும் நிலைத்திருக்கச் செய்வதுமான கொடிய ஏற்பாட்டைத் தகர்க்கிறோம் என்று பொருள். அதாவது சமதர்மத்திற்கான சூழ்நிலையை ஏற்படுத்துகிறோம் என்று அர்த்தம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக