ஞாயிறு, 8 நவம்பர், 2015

பேரறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள் பகுதி-8

பொன்மொழிகள்
1. மக்கள் எழுச்சியின் முன்பு எந்தக் கொடுமைதான் நிலைத்து நிற்க முடியும்? ஜார் நிற்கவில்லை. பிரெஞ்சுக் குபேரர்கள் நிற்கவில்லை. கொடுங்கோலர்கள் யாருமே நிற்கமுடியவில்லை. குப்புற விழுந்தனர். தவிடு பொடியாயினர். வர்ணாஸ்ரமும் அப்படித்தான் நிச்சயம் விழுந்து ஒழியும்.

2. 'செயலாளர்' என்ற இனிய தமிழ் இருக்கக் காரியதரிசி என்கிற வடசொல் ஏன்? உரிய மனைவி கண்ணகி இருக்கக் கணிகைகுல மாதவி ஏன்? செந்தமிழ் மொழியில் தேவையற்ற பிறமொழிச் சொற்கள் நுழைவானேன்?

3. ஜாதிகள் இருந்தாக வேண்டும் என்று எண்ணுபவர்கள் எவ்வழி உலகம் செல்கிறது என்பதை அறியாத ஏமாளிகள். காலத்தின் தாக்குதலைக் கயவரின் தாக்குதல் என்றும் பகுத்தறிவின் வேகத்தைப் பாப காரியம் என்றும் தவறாகக் கருதிடும் பக்குவமற்றவர்கள்.

4. பேச்சு மேடையில் பெரும்புகழ் பெற விரும்புவோருக்கு அச்சம், தயை, தாட்சண்யத்துக்குக் கட்டுப்பட்டு கருத்தை அடகு வைக்கும் குணமும் இருத்தலாகாது. காட்டுக் குதிரை மீதேறிச் செல்லும் முரட்டுச் சுபாவமும் இருத்தலாகாது.

5. அறிவுப் பண்ணைக்குப் பணியாற்ற முன் வருபவர்களை நாடு வரவேற்பதில்லை. நையாண்டி செய்கிறது. மதிப்பளிப்பதில்லை. தொல்லை தருகிறது. எனினும் அந்த ஒரு சிலரால்தான் நாடு முன்னேறுகிறது.

6. மலர்கொண்டு மாலை தொடுத்தலில் கைத்திறன் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் கைத்திறன் முழுவதும் காட்டி காகிதப் பூமாலை தொடுத்தால் பயன் என்ன? பேச்சுக்கு அழகு தேவைதான். ஆனால் அழகு மட்டுமே இருந்து கருத்து இல்லையானால் என்ன பயன்?

7. ஒரு சிறு மின்சார விளக்கு தரும் அளவுக்கு ஒளிபெற நாம் எத்தனை அகல் விளக்குத் தேட வேண்டும் - கணக்குப் போட்டுப் பாருங்கள் - பிறகு கூறுங்கள் விஞ்ஞானம் அதிக உழைப்பு எனும் சிறையிலிருந்து நம்மை மீட்டு விடுதலை வீரனாக்குமா, அல்லவா என்பதை!

8. வாலிபர்கள் ஆசிரியர்களாக வேண்டும் - உலகத்தைக் கிராமத்தாருக்குக் காட்ட வேண்டும். வாலிபர்கள் வைத்தியர்களாக வேண்டும் - நாட்டு மக்களின் உடல், உள்ளம் இரண்டிலும் உள்ள நோய் தீர்க்கும் மருந்தளிக்க வேண்டும். ஆம்! வாலிபர்கட்கு வேலை ஏராளமாக இருக்கிறது.

9. பகலோனைக் கண்டதும் மலர்ந்திடும் பங்கஜத்தைப் (தாமரைப்) பட்டத்தரசனும்கூட சட்டமிட்டுத் தடுத்துவிட முடியாது. இதுபோலத்தான் உண்மைக் காதல் என்னும் உத்தம உணர்ச்சியை ஓராயிரம் பேர் முயன்றாலும் ஒரு நாளும் அழித்துவிட முடியாது.

10. நமக்கென்ன என்று கூறும் சுயநலமிகளும், நம்மால் ஆகுமா என்று பேசும் தொடை நடுங்கிகளும், ஏன் வீண் வம்பு என்று சொல்லும் கோழைகளுமல்ல நாட்டுக்குத் தேவை. வீரர்கள் தேவை. உறுதிபடைத்த உள்ளங்கள் தேவை.

11. கருகிவிட இருந்த அரும்பு மலர்ந்தது போல - மங்கி விட்ட கண்கள் மீண்டும் ஒளி பெறத் தொடங்கியது போல - தேய்ந்த நிலவு திடீரென முழுமதியானது போல ஒரு நாட்டின் வரலாற்றிலே ஏற்படுகின்ற உன்னதமான சம்பவம் - சுதந்திரம்!

12. அஞ்சாநெஞ்சு படைத்த இலட்சியவாதிகள் தான் ஒரு நாட்டிற்குக் கிடைக்கக் கூடிய ஒப்பற்ற செல்வங்கள். ஏனெனில், பணம் வெறும் இரும்புப் பெட்டியில்தான் தூங்கும். ஆனால் இந்தச் செல்வங்களோ மக்களின் இதயப் பெட்டிகள் தோறும் நடமாடுவார்கள்.

13. சீமான்களில் சிலருக்குக் கூட சிற்சில சமயங்களில் ஏழையின் கண்ணீரைத் துடைக்க வேண்டும் என்கிற ஆசை வருவதுண்டு. ஆனால் அந்த ஆசை நிறைவேறுவதில்லை. காரணம், பிரபுக்களின் பட்டுத் துணிகளுக்கு ஏழையின் கண்ணீரைத் துடைக்கும் ஆற்றல் கிடையாது.

14. மேடைப் பேச்சு என்பது காலட்சேபமுமல்ல. வசன சங்கீதமும் அல்ல. இனிமைச் சுவையை எல்லோருக்கும் அளிக்கும் நா வாணிபமும் அல்ல. கைகட்டி கேட்கும் மக்கள் எதிரே நடத்தும் உபதேசமுமல்ல. உயிர்ப் பிரச்சினைகளைப் பற்றியக் கருத்துக்களை வெளியிடும் களம், மேடை.

15. புஞ்சையிலே நஞ்சைப் பயிர் பலிக்காது. குளிர்ப்பிரதேச விளைவு, கொதிப்புள்ள இடத்திலே பயிராகாது. அவை போலத்தான் புராண ஏடுகளை மட்டும் படித்துப் பயிலுவோரிடம் அறிவுத் தெளிவு ஏற்பட முடியாது.

16. ஒரு சிலரின் ஆசைக்கு மிகப் பலரை பலியாக்குவதுதான் முதலாளித்துவத்தின் முடிந்த கொள்கை. சக்திக்கேற்ற உழைப்பு, தேவைக்கேற்ற வசதி என்பதுதான் சமதர்மத் திட்டத்தின் அடிப்படை நோக்கம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக